இறந்தவன் வீடு
சவம் சலனமற்று
பட்டு போர்த்தப்பட்டு
படுக்க வைக்கப்பட்டிருந்தது
அறையெங்கும்
சிவப்பு ரோஜா மாலைகள்
சிந்தியிருந்தன சோக இதழ்களை
தலைமாட்டில் பத்தி
நெளிந்து புகைந்து கொண்டிருந்தது!
கால்மாட்டில் பூவை
இழந்தவளின் கண்ணீர்ப்புலம்பல்
அறையெங்கும் வழிந்தோடியது!
சுற்றிலும் சோகம் தேக்கி
சொந்தபந்தங்கள்
உறவுகள் நண்பர்கள்
சவத்துக்குரியவனின்
நேற்றைய வாழ்க்கையை
இன்றைய விசாரணையில்
அலசிக்கொண்டு
நாளைய சவங்கள்!
அப்போது தவிர்க்க முடியாமல்
வேறொரு நினைப்பும்
வேர் விட்டு முளைத்தது!
‘நீயும் ஒருநாள் இதுபோல்
விசாரிக்கப்படுவாய்’ என்று
எல்லாம் மறந்து விட்டு
மறுநாள் விடிந்தது!
2 comments:
அன்பு நண்பரே உங்களின் இந்த கவிதையை படித்தப் பொழுது ஒருவருடத்திற்கு முன்பு நான் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வந்தது:
கனவினில் மரணம்
கனவினில் நான் மரிக்கிறேன்
என் மரணத்தை நானே பார்க்கிறேன்
கனவில் மரணம் வித்தியாசமானது
அதிலும்
நம் மரணத்தை நாமேப் பார்ப்பது
கனவு மரணம் பயமில்லாதது
அதைப் பார்த்து நாம் அழுவதில்லை
கனவினில் மரணம் பார்த்து
விழித்தப் பொழுது
நிஜமரணத்தின் அச்சம்
மனதில் சிறுதுளியாய்..
ஆகா, அருமையாக எழுதியுள்ளீர்கள்.
Post a Comment